அக்கினிப் பெருமூச்சினூடாக நாடக உலகினிலேயே சுவாசமிட்ட செயல்திறன் அரங்க இயக்குனர் தே. தேவானந்த் அவர்களின் பாரம்பரியக் கலை வடிவங்களை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதன் பயனாக சென்னைப் பல்கலைக்கழக இதழியல்துறை மற்றும் தொடர்பாடல்துறை மாணவன் ஆடலரசு என்று பலராலும் அழைக்கப்படும் வெங்கடேஸ்வரன் வேணுகோபாலன் அவர்களை வரவழைத்து எமது பாரம்பரிய கலைகளோடு தொடர்புடைய மேலும் புதிய கலை வடிவங்களான சாட்டைக்குச்சியாட்டம், ஒயில் ஆட்டம், தப்பு ஆட்டம், கும்மியாட்டம், ஆதிவாசி நடனம் போன்ற புதிய அடவு முறைகளை 35ற்கும்மேற்பட்ட மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து இம்மாணவர்களைக் கொண்டே இவ் ஆற்றுகைகளை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்திலும், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிலும், கோப்பாய் கல்வியியற் கல்லூரியிலும், யாழ். பல்கலைக்கழக நுண்கலைக்கழத்திலும் நிகழ்ந்தப்பட்டன.
குறிப்பிட்ட நான்கே நான்கு நாட்களில் ஜந்து ஆட்ட வகைகளை கற்பிப்பது என்பது முடியாத ஒரு காரியம். ஆனால் மனமுண்டால் இடமுண்டு என்பதற்கிணங்க இக்கலைகளிலே மாணவர்களும் பயிற்றுவிப்பாளர்களும் மனம் வைத்து இக்கலைகளை திறன்பட அளிக்கை செய்தனர். எடுத்துக்காட்டாக ஒரு விவசாயி நெல் மணிகளை அறுவடை செய்த பின்னர் அவற்றை வண்டியிலேயே ஏற்றி செல்வது வழமை. வண்டியிலே பூட்டப்பட்ட மாடுகளை விவசாயி கேட்டிக் கம்பினால் விரட்டி வண்டியினை ஒட்டிச் செல்வான். அந்த விவசாயி “கெய்யா” “கெய்யா”… என்ற சொல்லைப் பயன்படுத்தி ஒரு அடியை கேட்டிக்கம்பத்தினால் மாட்டுக்கு அடிப்பான். இந்த அடியை பார்த்திருந்த ஒரு சமூகம் இவற்றினை ஓரு கலை வடிவத்திற்கு கொண்டு வர வேண்டும் என நினைத்து அவற்றுக்கு சாட்டைக்குச்சி என்ற பெயரை வழங்கி ஆற்றுகை செய்து வந்தார்கள் வருகின்றார்கள்.
பறை என்றதும் மறையாகச் சிந்திக்கும் யாழ்ப்பாண சமூகம் நடுவே முறையாக இவ் ஆட்டங்களைப் பழக்கி துணிந்தால் தோளில் போடும் துண்டு கூட நமக்குச் சொந்தமில்லை என்ற தாரக மந்திரத்தோடு துணித்தெழுந்து 1000 ற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் சென்றடைய வைத்த பெருமை யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குனர் தே. தேவானந்த் அவர்களையே சாரும்.
உலக அரங்கிலேயே பார்வையாளர்களை அதிகம் கொண்ட அரங்காக கிரேக்க அரங்கு காணப்பட்டது. இதே போன்றே 2011ஆம் ஆண்டு யாழ். குடா நாட்டிலே நாடகம் சார்ந்த நடவடிக்கைகளில் அதிக பார்வையாளர்களை உள்வாங்கும் திறமையை தே. தேவானந்த் அவர்கள் சுவீகரித்துக் கொண்டார். பார்வையாளர் நடுவே நானும் ஒரு பார்வையாளனாக இக்கலை வடிவத்தை பார்த்துக் கொண்டிருக்கையில் அருகிலே இருந்த 65 வயது மதிக்கத்தக்க கலாபூசணம் பத்தினிப்பிள்ளை என்னை மறைத்து எழுந்து நின்று கண் வெட்டாது பார்த்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சட்டென எழுந்த அம்மாவிடம் ஏன் அம்மா இப்படிப் பார்க்கிறீங்க என கேட்ட போது பிள்ளை கதைக்காதை நீ சின்னப்பிள்ளை நான் 65 வயதாகியும் இவ்வாறான கலை வடிவங்களைப் பார்த்ததில்லை இப்பத்தான் பார்க்கிறன் பொறு பொறு பிள்ளை எல்லாம் முடியக் கதைப்பம் எனக் கூறிய அந்த அம்மாவின் உணர்விலிருந்து நான் புரிந்து கொண்டேன் இக் கலை வடிவம் எல்லோரையும் கண்வெட்டாது கவனிக்கச் செய்திருக்கிறது என்று.
நாடகம் என்பது கட்புல செவிப்புல கலை வடிவமாகும். இதனால்தான் சமூகத்திலுள்ள பாத்திரங்களை நாடகம் போலச் செய்கின்றது. இதனால் பல்வேறு நிலையுள்ளவர்களையும் நாடகம் தைத்திருக்கிறது. அந்த வகையில் தே. தேவானந்த் அவர்களின் நெறியாள்கையில் உருவான “வண்டியும் தொந்தியும்” என்ற நாடகம் நகைச்சுவைப் பாங்கான முறையிலே தயாரிக்கப்பட்டு சிரிப்போடும் சிந்தனையை சீறி விட்டது. இவ் நாடகம் பல வரவேற்பை பெற்றுக்கொண்டது. எடுத்துக்காட்டாக அதிகாரிகளின் பின்னாலே அநீதியான முறையில் அலைந்து திரியும் சில வாலாட்டிகளுக்கும், சமூகத்தின் காவலர்கள் என்று சொல்லப்படும் ஊடகவியலாளர்கள் நடுநிலை தவறி செல்கின்ற போது இவர்களுக்கொல்லாம் சாட்டையடி கொடுப்பது போல் இந்நாடகத்தின் கரு உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வண்டிகளே சற்று சிந்தியுங்கள் தொந்திகளே பின்னால் ஒடாதீர்கள் என்ற உண்மையை புலப்படுத்தி நின்றது இந் நாடகம். நான்கு நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்நாடகம் வாயைப்பிளக்கும் அளவுக்கும் குடலை அறுக்கும் வகையிலும் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இங்கே நடிக்கப்பட்ட நான்கு நடிகர்களும் சிறப்பான பாத்திரத் தெரிவிலே நடிக்கப்பட்டதை உணர்ந்துகொள்ள முடிந்தது. இந்நடிகர்கள் யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கை நெறி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதும் பாராட்டத்தக்கதும். தேய்ந்து போகும் நாடகக் கலையை தீந்து போக விடாது கட்டிக்காத்துக் கொண்டிருக்கும் தே. தேவானந்த் அவர்கள் நாடக உலகில் முடிசூடா மன்னர்களில் ஒருவராக திகழ்பவர் என்றால் அது மிகையாகாது.
யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கை நிலையத்தினதும் செயல்திறன் அரங்க இயக்கத்தின் இயக்குனர் தே. தேவானந்த் அவர்களின் ஏற்பாட்டில் நடந்த இவ் ஆற்றுகைகள் இன்றுடன் முற்றும் பெறாமல் எல்லோர் மனங்களிலும் இடம்பிடித்தது போன்று பல பாகங்களிலும் இவ் ஆற்றுகை செய்ய வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாகும். இவற்றோடு யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கை நெறி மாணவர்கள் தொடந்தும் இவ் ஆற்றுகைகளை செய்து ஊடகத்தினதும் நாடகத்தினதும் பாரம்பரியங்களை கட்டிக்காக்க வெட்டிப்போட்ட மண்களில் விதையாகுவோம்.
No comments:
Post a Comment