Tuesday, January 3, 2012

"சிருங்காரச் சீமாட்டியே எம் வருங்கால மூதாட்டியே"


“நான் பவராக இருக்கனும் பெயர் எடுக்கனும் என்ர  பெயர் இந்த உலகத்தில் நிலைக்கவேணும் என நான் நினைக்கேல மாறாக சமூதாயம் மேலே வரனும்”  என்ற குறிக்கோளில் இன்று வரை தனது வாழ்வை அர்ப்பணித்து வருகிறார் வல்லிபுரம் பத்தினிப்பிள்ளை ஆசிரியர்.
இவ்வுலகில் இத்தகைய வரிசையில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் ஒரு சிலரே அந்த வகையில் இன்று எமது சமூதாயத்தில் பல கல்வியலாளர்களின் தோற்றத்திற்கும் சமூக சேவைகளின் முன்னேற்றதிற்கும் அரும்பாடுபட்டு வருகிறார் வடமாராட்சி துன்னாலையைச் சேர்ந்த வல்லிபுரம் பத்தினிப்பிள்ளை ஆசிரியர்.
இன்று யாழ். குடா நாட்டில் உயர் பதவிகளை வகிப்பவர்கள் பெண்களே. இதற்கு மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. அத்தகைய வரிசையில் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணமும் ஒருவர் ஆவார். இவர் பத்தினிப்பிள்ளை ஆசிரியரின் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தினிப்பிள்ளை ஆசிரியர் அகில இலங்கை கலை இலக்கிய சங்கத்தில் உபசெயலாளராகவும் மற்றும் நெல்லியடி சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கத்தில்  தலைவராகவும், நெல்லியடி யூனியன் மகளிர் சங்கத்தலைவியாகவும், யா/ காசிநாதர் வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கத்தலைவியாகவும் இருந்து பல அரிய சேவைகளை ஆற்றி வருகிறார்.
அந்த வகையில் இவருடைய வாழ்க்கை வரலாற்றை நோக்கும் போது யா/ வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் எஸ்.எஸ்.சி வரை படித்திருக்கிறார். இவருடைய தந்தையார் கேட்டார் இனியும் படிப்பா? ஏன்று பகிடியாகக் கேட்கும் போதெல்லாம் அறுதியும் உறுதியுமாக நான் படிக்கத் தான் போறேன் எனக் கூறிக்கொள்வார். அந்த காலத்தில் பெண்கள் சைக்கிள் ஒடினால் ஆணுக்கு நிகராக கருதிய காலம். அப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்ந்த பத்தினிப்பிள்ளை ஆசிரியர் தனது படிப்பினை கைவிடவில்லை. தொடர்ந்து வாணிகம் கலைகழகம் கரவெட்டிக்கு கால் நடையில் சென்று தமிழ் பண்டிதர், பால பண்டிதர், பிரதேச பண்டிதர், படித்து பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்திருக்கிறார்.
வாழ்வரதாரத்தில் பின் தங்கிய பிரதேசமான மலையப் பகுதியில் கோலிற்றி னிற்றி கோலிச்சில் 1964ஆம் ஆண்டு தனது முதலாவது ஆசிரியர் பணியை 8 வருடம் பணியாற்றியிருக்கிறார். சாதாரணமாக ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களில் 5 வருடம் பணியாற்றி தமது சொந்த இடத்திற்கு மாற்றமடைவர்கள் ஆனால் பத்தினிப்பிள்ளை ஆசிரியர் மலையக மாணவர்களின் முன்னேற்றத்திற்காக மேலும் 3 வருடம் பணியாற்றியிருக்கிறார். அவர் மலையகத்தில் 8 பிரதேச பண்டிதர்களையும், 2 பால பண்டிதர்களையும் உருவாக்கியிருக்கிறார். பின்னர் வடமாராட்சி யா/ ஞானசாரியார் கல்லூரியில் 19 வருடம் ஆசிரியராக பணியாற்றினார். அவர் இங்கு 9 பிரதேச பண்டிதர்களையும், பல ஆசிரியர் பரம்பரையும் உருவாக்கியிருக்கிறார்.






இன்று சமூகத்தில் பாதிக்கப்பட்ட விதவைகள் கனபேர் இருக்கிறார்கள். இவர்களை அடையாளம் கண்டு உதவுவது அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் அரசாங்கம் இவ் உதவியை செய்ய தவறி விட்டது. ஆனால் எங்கள் ஊரிலிருக்கிற வல்லிபுரம் பத்தினிப்பிள்ளை அவர்கள் இவ் உதவியை செய்ய மறக்க வில்லை. இதன் காரணமாக தையல் பயிற்சி, பன்ணை வேலைகள் இவற்றில் பெண்களையும் ஈடுபடுத்தியிருக்கிறார். மற்றும் பல திருமணங்களையும் நிறைவேற்றி தன்னாலான உதவியை செய்திருக்கிறார்.
இன்று ஒவ்வொரு வருடமும் வடமாராட்சி கரவெட்டி பிரதேச செயலகத்தில் கலாசார பேரவையினால் நடாத்தப்படும் போட்டிகளில் கவிதைப் போட்டியும் ஒரு அங்கமாகும். வல்லிபுரம் பத்தினிப்பிள்ளை அவர்கள் 75 வயதை அடைந்தும் கவிதைப் போட்டியில் தொடர்ந்து 7 தடவை பங்கு பற்றி முதலாம் இடத்தை தன் வசமாக்கிக் கொண்டார். இவருடைய கை வந்த கலைகளாக கவிதை, கட்டுரை, சிறுகதை, பேச்சாற்றல்,  நாடகங்கள் பல பதிவாகியிருக்கின்றன. இவர் நாடகத்தை தானே உருவாக்கி தானே நெறிப்படுத்தி தானே நடிகையாகவும் நடித்திருக்கிறார். உதாரணமாக தேசிய கூட்டுறவு சங்கத்தின் ஊடாக நடைபெற்ற போட்டியில் “மதுவிலக்கு” என்ற நாடகத்தில் “பொண்ணுப்பேத்தி” என்ற பாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகர் என்ற விருதையும் பெற்றிருக்கிறார்.



இவர் உருவாக்கிய மாணவர்களில் இன்று யாழ்..பல்கலைகழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் உட்பட யா/ வடமாராட்சி இந்து மகளிர் கல்லூரி அதிபர் நவரட்ணம் தேவராணி, யா/ ஹரட்லிக் கல்லூரி ஆசிரியர் எம். நவரட்ணம், யா/ ஞானசாரியார் கல்லூரி ஆசிரியர்கள் எஸ். பராசக்தி, வை. சிவமங்கை, எம். விஜயகலா மற்றும் அம்பன் வைத்தியசாலையில் கடமையாற்றும் னுழஉவழச எஸ்.எஸ் மங்கையமணி போன்றவர்கள் இவரால் உருவாக்கப்பட்டவர்கள். இன்று இவரது மாணவர்கள் 45 மேற்பட்டவர்கள் யாழ்.பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பினை படித்து வருகிறார்கள்.
பத்தினிப்பிள்ளையின் தாரக மந்திரமாக “உலகத்தைப் பார்த்தால் உலகம் துன்பப்பட்டால் எனக்கும் துன்பம் தானே! உலகத் துன்பம் எனக்கு கசக்கும் தானே” என்ற இவரின் கூற்றை இன்று எத்தனை ஆசிரியர்களின் மனதில் இருக்கிறதோ தெரியவில்லை?
ஒரு விவசாயி ஒரு நாற்றை அறுவடை செய்கிறான். நாற்று போடும் போது பலன் அளிக்காமல் விட்டால் அல்லது மழை வராமல் விட்டால் சிறுபோகம், பெரும்போகம் ஆகியவற்றில் ஒன்றைத் தான் பாதிக்கும். ஆனால் ஒரு ஆசிரியர் நல்ல ஆசானாக இருந்து ஒரு மாணவனுக்கு கல்வி புகட்ட வில்லையாயின் அவ் மாணவரின் வாழ் நாள் முழுவதுமே பாதிக்கப்படும் என்பது பத்தினிப்பிள்ளை ஆசிரியரின் கூற்றிலிருந்து தெரிய வருகின்றது.

No comments:

Post a Comment