Thursday, August 2, 2012

ஓசோனிலும் ஓட்டை, சட்டத்திலும் ஓட்டை

யார்தான் விடுகின்றார்கள் சேட்டை
(“சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமன்)

ஓவ்வொரு குற்றங்களை இழைக்கும் குற்றவாளிகள் மீது தண்டனை வழங்குவதற்கு சட்டங்கள் உருவாக்கப்படுகின்றது. அது போன்று சிறுவர் துஷ்பிரயோகம் இழைக்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் சட்டங்கள் உண்டு. ஆனால் இவை எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. என்பது கேள்விக்குரிய விடயமாகும். சட்டம் என்பது மனிதனைக் கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சாசனமாகும். அதாவது ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற அநீதிகளுக்கு நியாயமான தீர்ப்பை வழங்குவதற்கு சட்டம் பெரிதும் உதவுகின்றது.
இன்றைய காலத்தில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் அதிகரித்து கொண்டே செல்கின்றது. பாலியல் வன்முறையை மட்டும் சிறுவர் துஷ்பிரயோகம் என சொல்ல முடியாது. உடல், உள, சமூக ரீதியாக ஏற்படுகின்ற வன்முறைகள் சிறுவர் துஷ்பிரயோகமாகும். இவ்வாறான வன்முறைகள் சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கோ, விருத்திக்கோ, கௌரவத்துக்கோ பாதிப்பை ஏற்படுத்துகின்ற பல உடல், உளத்தொல்லைகளும், பாலியல்  துஷ்பிரயோகங்களும் சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படுகின்றது.
சிறுவர்கள் என்றால் யார்? 1 தொடக்கம் 18 வயதிற்குட்டபட்டவர்களை பிள்ளைகள் என ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் உரிமை சாசனத்தை அங்கிகரித்துள்ளது.  சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டரீதியான எழுத்து வடிவங்கள் இலங்கையில் உள்ளன.                                                 ஆனால் இந்தச்சட்டங்கள் எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன அல்லது குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது கேள்விக்குரியதாக இருக்கின்றது.
அண்மைக்காலமாக சிறுவர்கள் உடல், உள, சமூக ரீதியான பல பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். சிறுவர்களுக்கு எதிராக தீங்கிழைக்கப்படும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை கொடுப்பது அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை குறைப்பதற்காகவே. ஆனால் இன்று இந்த சட்டத்தினால் குறிப்பிட்ட ஒரு சிலரே குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டும் குற்றம் புரிந்து கொள்பவர்கள் சட்டத்தில் இருந்து விலகியும் நிற்கின்றார்கள். இதற்கு காரணம் அதிகாரி வர்க்கத்தினால் ஏற்படுகின்ற கிளறுபடிகளேயாகும். வசதிபடைத்தவர்கள் குற்றத்தை புரிந்து விட்டு சட்டத்திலிருந்து தப்பிக்கொள்வதற்கு அதிகாரி வர்க்கத்தினருக்கு பணத்தினை இலஞ்சமாக கொடுத்து சட்டத்தின் ஒட்டைகளிலிருந்து தப்பிக்கொள்கின்றார்கள். ஆனால் ஏழைகள் சிறிய குற்றங்களிலிருந்து தப்பிக்கொள்ள முடியாமல் சிறைக்கூடங்களில் மறைந்து கிடக்கின்றார்கள்.
 சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக நீதித்துறை சட்டத்தில் ஏற்படுகின்ற பலம், பலவீனத்திற்குரிய காரணம் என்னவென கண்டறிய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கே. சுகாஸ் அவர்களை சந்தித்த வேளையில்,



வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது. இதற்கான காரணம் எழுத்திலுள்ள சட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாத நிலையேயாகும். இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கான போதியளவு சட்டங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதில்லை. சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளில் பாலியல் வன்முறை சந்தோகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும். ஒருவர் குற்றம் செய்தால் 100% உண்மையென நிரூபிக்கப்பட்டால் தான் சட்டத்தில் தண்டிக்கலாம். ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பிள்ளையை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கினால் அங்கு எந்த உண்மையும் கண்டறியப்படமாட்டாது. ஏனெனில் மனநிலையான சிறுமியாள் எந்தவிதமான உண்மையையும் கூறமுடியாத நிலை காணப்படுவதால் குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்கொள்கின்றார்கள். சட்டங்களின் போக்கைப்பார்க்கும் போது பொலிஸாருடைய போக்கும் கேள்விக்குரியதாகவும் சந்தேகப்படக்கூடியதாகவும் உள்ளது. சில முக்கியமான வழக்குகளில் பொலிஸாருடைய ஆதாரங்களும் விசாரணைகளும் எந்த வழக்கையும் திசைதிருப்புவதாக இருக்கின்றது. உண்மையைக் கண்டறிய சட்டத்தில் ஒரு அசமந்தப்போக்கு ஏற்படுவதனால் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றது.
சட்டதிட்டங்களின் பிரகாரத்தின் படி மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு  எதிராக இழைக்கப்படுகின்ற குற்றங்கள் ஏனைய குற்றங்களை விட கடுமையாகவுள்ளது. இலங்கையிலுள்ள சட்டதிட்டங்களின் பிரகாரம் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களுக்கு இருபது வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை வழங்கும் சட்டம் உண்டு. பெண்பிள்ளைகளை தவறான முறையில் பார்த்தால் கூட ஐந்து வருடங்களுக்கு சிறையில் இடுவதற்கு சட்டத்தில் ஏற்பாடுகள் உண்டு.
குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பித்து கொள்ளவதற்குரிய காரணங்களாக, மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு எதிராக குற்றங்கள் இடம்பெற்றால் அவை சட்டதிற்கு கொண்டுவரபடமாட்டாது, விசாரணைகளை நேர்மையாகவும், நீதியாகவும் இடம்பெறாமை, குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறுதல், பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை இனம்காட்டுவதற்கு தயங்குதல், வைத்திய அதிகாரிகள் சில பரிசோதனைகளின் போது குற்றவாளிகளை தப்பித்து கொள்வதற்கு பிழையான தரவுகளை கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளினால் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றார்கள் என கே. சுகாஸ் அவர்கள் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
இலங்கையில் பெருமளவு சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அந்தப்பிள்ளையினுடைய குடும்ப அங்கத்தவர்களினாலும் நெருங்கிய உறவினர்களினாலும் இரத்த உறவுகளினாலும் சில குடும்பங்களில் சொந்த உறவினர்களினாலும் ஏற்படுகின்றன. பெற்றோர்கள்  ஆசிரியர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினால் பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிலையங்களிலும் கல்வி கற்பதற்காக அனுப்புகின்றார்கள். ஆனால் இங்கு கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ஆசிரியர்கள் மூலமும் மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுகின்றார்கள். சில கோட்டக்கல்வி அதிகாரிகளால் கூட சில மழலைப்பிள்ளைகள் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். இதில் சட்டம் எவ்வளவு தூரம் குற்றவாளிகளைத்தாண்டிக்கின்றது என்பது கேள்விக்குரியதாக இருக்கின்றது.


இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விபரக்கருத்துக்கணிப்பின் படி என்றுமில்லாத வகையில் அண்மைக்காலமாக குறிப்பாக போருக்கு பின்னரான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து செல்கின்றது. யாழ்ப்பாண சிறுவர் நன்னடத்தை பிரிவு அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரக்கருத்துக்கணிப்பின் படி  2011 ஆண்டு பாலியல் துஸ்பிரயோகம் -65,  உடல்ரீதியான துஷ்பிரயோகம்-12, உள ரீதியான துஷ்பிரயோகம் –1, புறக்கணித்தல்  -16, சட்டத்தை குழப்புதல்- 25, கடத்தல் -2,நெருக்குதல்-1,தனிமைப்படுத்தல்-13, பிள்ளைத்திருமணம் - 14 பிள்ளைகள் வீட்டுப்பொறுப்பை தாங்குதல்-3, தற்கொலைமுயற்சி-5,  தனிமைப்படுத்தல் - 57, வேலைக்கு அமர்த்துல் - 9 , மொத்தமாக 223 பேரும் 2012 ஆண்டு ஆனி மாதம் வரையின் கணக்கெடுப்பின் படி பாலியல் துஸ்பிரயோகம - 21, உடல்ரீதியான துஷ்பிரயோகம - 12, உளரீதியான துஷ்பிரயோகம் - 2, தற்கொலைமுயற்சி - 1, தற்கொலை 1, புறக்கணித்தல் - 8, சட்டத்தை குழப்புதல் - 10, நெருக்குதல் -1, தனிமைப்படுத்தல் -6, பிள்ளைத்திருமணம் -26,  பாடசாலை செல்லாதவர்கள் - 46,  Adoption- 39 சிறுவர் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர் துஷ்பிரயோகங்கள் உடல் ரீதியாக மட்டுமன்றி  வெவ்வேறு வழிகளில் இடம்பெறுகின்றது. தொலைபேசி வாயிலாகவும் குடும்ப அயலவர்களின் எதிர்பார்க்க முடியாத செயற்பாடுகளினால் இவ்வாறான வன்முறைகள் அதிகரித்து வருகின்றது.
எமது சமூகத்தில் ஒரு சிறுமி துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட குடும்பம் பொலிஸ் நிலையத்திற்கு முறையிட போனால் அந்த சமூகம் நீ ஏன் முறையிடப்போறாய் என சட்டத்தை மறைக்கின்ற நிலைமை ஏற்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதாரவாக செயற்படும் நிலைமை மிக அரிதாகவே இருக்கின்றது. இவ்வாறான நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக சமூகம்  செயற்பட்டு குற்றவாளியை இனம் காண வேண்டும்.
 “சட்டம் போட்டு திருத்திற கூட்டம் திருத்திக்கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற பாடல் வரிக்கு ஏற்ப சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ ஆதரவாக சமூகமோ அல்லது குடும்பமோ செயற்பட்டு குற்றவாளியை இனம் காணுவதற்கு பக்கசார்பாக செயற்படுவமே ஆனால் சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்கொள்ள முடியாது.