Wednesday, August 10, 2011

சொந்த காணிகள் இன்றி சிரமப்படும் மருதங்கேணி மக்கள்




மீள்குடியேற்றப்பட்ட மருதங்கேணி மக்கள் சொந்தக் காணிகள் இன்றி சிரமப்படுவதாக அப்பிரதேசத்தில் வசிக்கும் பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.

இவர் மேலும் தெரிவிக்கையில் இப்பகுதியில் வாழும் மக்கள் யுத்தம் காரணமாக 1999 ஆம் ஆண்டு பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வன்னி போன்ற பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர். அவர்கள் தற்போது மருதங்கேணியில் அரசாங்க காணியில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகிய மருதங்கேணியில் சுமார் 200 குடும்பங்கள் தற்போது வசிக்கின்றனர். இவர்களில் 60 குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் சொந்தக்காணி கொடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அரசாங்க காணியில் தற்காலியமாக குடியிருக்கின்றனர்.  இவர்களுக்கு  சுயதொழில் வாய்ப்பு கொடுக்கும் முகமாக கோடாரி, மண்வெட்டி, கத்தி மற்றும் 12 தகரங்கள் கொடுக்கப்பட்டதாகவும் அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

தற்போது மீள்குடியேற்றப்பட்டு ஒரு வருடமாகியும் இன்னும் சுமார் 140 குடும்பங்கள் சொந்தக் காணிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். சில குடும்பங்கள் கிணறுகள் இன்றி உறவினர்களின் வீடுகளுக்கு சென்று தான் தண்ணீர் எடுக்கின்றனர். மழை காலம் வருவதற்கு முன் விரைவில் சொந்தக் காணிகள் தந்தால் தான் நாம் வீடு கட்டி வசிக்கலாம் என அப்பிரதேச மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.