Thursday, August 2, 2012

ஓசோனிலும் ஓட்டை, சட்டத்திலும் ஓட்டை

யார்தான் விடுகின்றார்கள் சேட்டை
(“சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமன்)

ஓவ்வொரு குற்றங்களை இழைக்கும் குற்றவாளிகள் மீது தண்டனை வழங்குவதற்கு சட்டங்கள் உருவாக்கப்படுகின்றது. அது போன்று சிறுவர் துஷ்பிரயோகம் இழைக்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் சட்டங்கள் உண்டு. ஆனால் இவை எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. என்பது கேள்விக்குரிய விடயமாகும். சட்டம் என்பது மனிதனைக் கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சாசனமாகும். அதாவது ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற அநீதிகளுக்கு நியாயமான தீர்ப்பை வழங்குவதற்கு சட்டம் பெரிதும் உதவுகின்றது.
இன்றைய காலத்தில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் அதிகரித்து கொண்டே செல்கின்றது. பாலியல் வன்முறையை மட்டும் சிறுவர் துஷ்பிரயோகம் என சொல்ல முடியாது. உடல், உள, சமூக ரீதியாக ஏற்படுகின்ற வன்முறைகள் சிறுவர் துஷ்பிரயோகமாகும். இவ்வாறான வன்முறைகள் சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கோ, விருத்திக்கோ, கௌரவத்துக்கோ பாதிப்பை ஏற்படுத்துகின்ற பல உடல், உளத்தொல்லைகளும், பாலியல்  துஷ்பிரயோகங்களும் சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படுகின்றது.
சிறுவர்கள் என்றால் யார்? 1 தொடக்கம் 18 வயதிற்குட்டபட்டவர்களை பிள்ளைகள் என ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் உரிமை சாசனத்தை அங்கிகரித்துள்ளது.  சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டரீதியான எழுத்து வடிவங்கள் இலங்கையில் உள்ளன.                                                 ஆனால் இந்தச்சட்டங்கள் எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன அல்லது குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது கேள்விக்குரியதாக இருக்கின்றது.
அண்மைக்காலமாக சிறுவர்கள் உடல், உள, சமூக ரீதியான பல பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். சிறுவர்களுக்கு எதிராக தீங்கிழைக்கப்படும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை கொடுப்பது அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை குறைப்பதற்காகவே. ஆனால் இன்று இந்த சட்டத்தினால் குறிப்பிட்ட ஒரு சிலரே குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டும் குற்றம் புரிந்து கொள்பவர்கள் சட்டத்தில் இருந்து விலகியும் நிற்கின்றார்கள். இதற்கு காரணம் அதிகாரி வர்க்கத்தினால் ஏற்படுகின்ற கிளறுபடிகளேயாகும். வசதிபடைத்தவர்கள் குற்றத்தை புரிந்து விட்டு சட்டத்திலிருந்து தப்பிக்கொள்வதற்கு அதிகாரி வர்க்கத்தினருக்கு பணத்தினை இலஞ்சமாக கொடுத்து சட்டத்தின் ஒட்டைகளிலிருந்து தப்பிக்கொள்கின்றார்கள். ஆனால் ஏழைகள் சிறிய குற்றங்களிலிருந்து தப்பிக்கொள்ள முடியாமல் சிறைக்கூடங்களில் மறைந்து கிடக்கின்றார்கள்.
 சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக நீதித்துறை சட்டத்தில் ஏற்படுகின்ற பலம், பலவீனத்திற்குரிய காரணம் என்னவென கண்டறிய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கே. சுகாஸ் அவர்களை சந்தித்த வேளையில்,



வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது. இதற்கான காரணம் எழுத்திலுள்ள சட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாத நிலையேயாகும். இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கான போதியளவு சட்டங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதில்லை. சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளில் பாலியல் வன்முறை சந்தோகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும். ஒருவர் குற்றம் செய்தால் 100% உண்மையென நிரூபிக்கப்பட்டால் தான் சட்டத்தில் தண்டிக்கலாம். ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பிள்ளையை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கினால் அங்கு எந்த உண்மையும் கண்டறியப்படமாட்டாது. ஏனெனில் மனநிலையான சிறுமியாள் எந்தவிதமான உண்மையையும் கூறமுடியாத நிலை காணப்படுவதால் குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்கொள்கின்றார்கள். சட்டங்களின் போக்கைப்பார்க்கும் போது பொலிஸாருடைய போக்கும் கேள்விக்குரியதாகவும் சந்தேகப்படக்கூடியதாகவும் உள்ளது. சில முக்கியமான வழக்குகளில் பொலிஸாருடைய ஆதாரங்களும் விசாரணைகளும் எந்த வழக்கையும் திசைதிருப்புவதாக இருக்கின்றது. உண்மையைக் கண்டறிய சட்டத்தில் ஒரு அசமந்தப்போக்கு ஏற்படுவதனால் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றது.
சட்டதிட்டங்களின் பிரகாரத்தின் படி மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு  எதிராக இழைக்கப்படுகின்ற குற்றங்கள் ஏனைய குற்றங்களை விட கடுமையாகவுள்ளது. இலங்கையிலுள்ள சட்டதிட்டங்களின் பிரகாரம் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களுக்கு இருபது வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை வழங்கும் சட்டம் உண்டு. பெண்பிள்ளைகளை தவறான முறையில் பார்த்தால் கூட ஐந்து வருடங்களுக்கு சிறையில் இடுவதற்கு சட்டத்தில் ஏற்பாடுகள் உண்டு.
குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பித்து கொள்ளவதற்குரிய காரணங்களாக, மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு எதிராக குற்றங்கள் இடம்பெற்றால் அவை சட்டதிற்கு கொண்டுவரபடமாட்டாது, விசாரணைகளை நேர்மையாகவும், நீதியாகவும் இடம்பெறாமை, குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறுதல், பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை இனம்காட்டுவதற்கு தயங்குதல், வைத்திய அதிகாரிகள் சில பரிசோதனைகளின் போது குற்றவாளிகளை தப்பித்து கொள்வதற்கு பிழையான தரவுகளை கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளினால் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றார்கள் என கே. சுகாஸ் அவர்கள் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
இலங்கையில் பெருமளவு சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அந்தப்பிள்ளையினுடைய குடும்ப அங்கத்தவர்களினாலும் நெருங்கிய உறவினர்களினாலும் இரத்த உறவுகளினாலும் சில குடும்பங்களில் சொந்த உறவினர்களினாலும் ஏற்படுகின்றன. பெற்றோர்கள்  ஆசிரியர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினால் பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிலையங்களிலும் கல்வி கற்பதற்காக அனுப்புகின்றார்கள். ஆனால் இங்கு கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ஆசிரியர்கள் மூலமும் மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுகின்றார்கள். சில கோட்டக்கல்வி அதிகாரிகளால் கூட சில மழலைப்பிள்ளைகள் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். இதில் சட்டம் எவ்வளவு தூரம் குற்றவாளிகளைத்தாண்டிக்கின்றது என்பது கேள்விக்குரியதாக இருக்கின்றது.


இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விபரக்கருத்துக்கணிப்பின் படி என்றுமில்லாத வகையில் அண்மைக்காலமாக குறிப்பாக போருக்கு பின்னரான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து செல்கின்றது. யாழ்ப்பாண சிறுவர் நன்னடத்தை பிரிவு அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரக்கருத்துக்கணிப்பின் படி  2011 ஆண்டு பாலியல் துஸ்பிரயோகம் -65,  உடல்ரீதியான துஷ்பிரயோகம்-12, உள ரீதியான துஷ்பிரயோகம் –1, புறக்கணித்தல்  -16, சட்டத்தை குழப்புதல்- 25, கடத்தல் -2,நெருக்குதல்-1,தனிமைப்படுத்தல்-13, பிள்ளைத்திருமணம் - 14 பிள்ளைகள் வீட்டுப்பொறுப்பை தாங்குதல்-3, தற்கொலைமுயற்சி-5,  தனிமைப்படுத்தல் - 57, வேலைக்கு அமர்த்துல் - 9 , மொத்தமாக 223 பேரும் 2012 ஆண்டு ஆனி மாதம் வரையின் கணக்கெடுப்பின் படி பாலியல் துஸ்பிரயோகம - 21, உடல்ரீதியான துஷ்பிரயோகம - 12, உளரீதியான துஷ்பிரயோகம் - 2, தற்கொலைமுயற்சி - 1, தற்கொலை 1, புறக்கணித்தல் - 8, சட்டத்தை குழப்புதல் - 10, நெருக்குதல் -1, தனிமைப்படுத்தல் -6, பிள்ளைத்திருமணம் -26,  பாடசாலை செல்லாதவர்கள் - 46,  Adoption- 39 சிறுவர் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர் துஷ்பிரயோகங்கள் உடல் ரீதியாக மட்டுமன்றி  வெவ்வேறு வழிகளில் இடம்பெறுகின்றது. தொலைபேசி வாயிலாகவும் குடும்ப அயலவர்களின் எதிர்பார்க்க முடியாத செயற்பாடுகளினால் இவ்வாறான வன்முறைகள் அதிகரித்து வருகின்றது.
எமது சமூகத்தில் ஒரு சிறுமி துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட குடும்பம் பொலிஸ் நிலையத்திற்கு முறையிட போனால் அந்த சமூகம் நீ ஏன் முறையிடப்போறாய் என சட்டத்தை மறைக்கின்ற நிலைமை ஏற்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதாரவாக செயற்படும் நிலைமை மிக அரிதாகவே இருக்கின்றது. இவ்வாறான நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக சமூகம்  செயற்பட்டு குற்றவாளியை இனம் காண வேண்டும்.
 “சட்டம் போட்டு திருத்திற கூட்டம் திருத்திக்கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற பாடல் வரிக்கு ஏற்ப சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ ஆதரவாக சமூகமோ அல்லது குடும்பமோ செயற்பட்டு குற்றவாளியை இனம் காணுவதற்கு பக்கசார்பாக செயற்படுவமே ஆனால் சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்கொள்ள முடியாது.
 

Tuesday, January 10, 2012

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்களும் இருக்கத்தான் செய்வார்கள்

குடாநாட்டில் இருந்து பிற இடங்களுக்கு சென்று வர பாதுகாப்பு கெடு பிடிகள் போக்குவரத்து சிரமங்கள் என்ற கஷ்ரமான சூழ்நிலை முன்னர் இருந்தது. இன்று அவை மறைந்து போக்குவரத்து இலகுவாகியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் ஏமாற்றுக்காரர்களும் வருகை தந்து குடாநாட்டை கலக்குவது கவலை தருவதாக உள்ளது.
ஜோதிடம் பார்ப்பவர் என்று கூறிக்கொண்டு பெண்மணி ஒருவர் வீடொன்றுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த பெண்ணிடம் உனது வீட்டில் பில்லி சூனியம் யாரோ செய்திருக்கிறார்கள் இதை எடுத்தால் தான் உனது வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறியுள்ளார். அதற்கு ஏற்ற பொருளை வேண்டி பில்லி சூனியம் கலைப்பதாக பல மந்திரங்களை செய்து தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து அந்த தண்ணீரை எல்லோரும் பருக வேண்டும் என்று சொல்லி அவர்களை மயக்கச் செய்து விட்டு வீட்டிலிருக்கும் உடு துணி, பொருட்கள் அனைத்தையும் எடுத்து சென்று விட்டார்.
நம்மவர்கள் இந்தியர் என்றால் வாயைப் பிளப்பவர்கள். இதுவே ஏமாற்றுக்காரர்களுக்கு வாய்ப்பாக உள்ளது. பலரும் கஷ்ரம் என்று ஜோதிடம் கேட்க போனால் ஏமாற்றம் தான் அடைகிறார்கள். இதனால் உண்மையான ஜோதிட காரருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இந்நிலை குடாநாட்டில் பெருகிக் கொண்டு வருகின்றது.
மோசடியில் இது ஒரு வகை என்றால் இராணுவத்தின் பெயரால் கூட மோசடிகள் நடக்கின்றன. யாழ்ப்பாணத்தில் பிரபல கடை ஒன்றில் ஒருவர் “தான் இராணுவ முகாமில் இருந்து வருவதாகவும், அதிகாரி பொருட்கள் வாங்கி வரச்சொன்னதாகவும் கூறி” பெரிய பட்டியலை வாசித்தான். அவர் கேட்ட பொருட்கள் உடனே “பில்” போடப்பட்டு பார்சல் பண்ணப்பட்டன. சுமார் மூன்று லட்சம் பெறுமதியான பொருட்கள் தயார் நிலையில் இருந்தன. “பெரியதுரை காசு கொண்டு வருவார் சாமான்கள் ஏற்ற லொறியும் வரும்” என்று கொச்சைத்தமிழில் பேசி வீதியை பார்த்தக்கொண்டு நிற்பது போல் நின்றார்.
சுற்று நேரத்தில் ஓரு பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு “இதை நான் சைக்கிளில் கொண்டு போகின்றேன் மிகுதியை ஏற்ற லொறி வரும்” என்று கூறிவிட்டு எடுத்துச் சென்றார். அவர் கொண்டு போன பெட்டியில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரெட் பண்டல் இருந்தது.  இவ்வளவு பெறுமதியான சாமான்களுக்கு “பில்” போடடுப் போகிறார். எப்படியும் அதை ஏற்ற ஆக்கள் வருவார்கள் என நம்பிக்கையோடு வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார் கடைக்காரர். பொழுது சாய்ந்தும் எவரும் வரவில்லை. இந்த சம்பவம் நடந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது இன்னும் தான் வரவில்லை. அந்த முதலாளி இராணுவத்தினரிடம் முறைப்பாமு செய்தால் அப்படியான ஓருவர் அந்த முகாமில் இல்லை என்று தெரிந்தது.
இத்தகைய செயலால் பாதுகாப்புப் படையினருக்கு கூட கெட்ட பெயர் வருகிறது. இதற்கு பொலீஸ், இராணுவத்தின் பாதுகாப்பை குறை கூற முடியாது. மக்களே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்கள் கொஞ்சம் அயர்ந்து போனால் தலையில் மிளகாய் அரைத்து விட்டு போய் விடுவார்கள். ஏமாற்றவென்று புறப்பட்டவர்கள் பல உத்திகளை பயன்படுத்துவார்கள். இந்த நேரத்தில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
“வார்த்தையில் அழுத்தமும் வாதத்தில் தெளிவும் தேவை”

ஊடக அறிவை மாணவர்களுக்கு வழங்க பாடசாலைகளில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை தெரிவிப்பு


 மாணவர்களுக்கு ஊடக அறிவை புகட்டுவதற்கு அதிபர்கள் பாடசாலைகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் ஊடக வளநிலைய மேற்பார்வையாளருமான பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்.வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் கல்வி வலயப் பாடசாலை அதிபர்களுக்கு நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இதனைக் குறிப்பிட்டார். இவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்கள் ஊடகக் கல்வியினை கற்க வேண்டும். வருங்காலம் ஊடகத்திலே தங்கியுள்ளது. அத்துடன்  ஊடகத்துறையில் ஏற்படப் போகும் பாரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கும் ஊடக அறிவும், தொடர்பாடல் பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டாhர்.

யாழ்ப்பாணத்தில் 56 ஆயிரத்து 870 பேர் மீளக்குடியமர்வுக்காக காத்திருக்கின்றனர்

யாழ் அரச அதிபர் தகவல்


யாழ் மாவட்டத்தில் இன்னும் 56 ஆயிரத்து 870 பேர் மீளக்குடியேற்றத்திற்காக காத்திருப்பதாக யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
கடந்த மாதம் 25 ஆம் திகதி மீளாய்வுத்தரவுகளில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் மேலும் தெரிவிக்கையில், குடாநாட்டில் தற்போது மீளக்குடியமர்வுகள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் வேலணைப் பிரதேச செயலர் பிரிவில் 93 குடும்பங்களும், ஊர்காவற்றுறை உதவி அரச அதிபர் பிரிவில் 11 குடும்பங்களும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 114 குடும்யங்களும், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 872 குடும்பங்களும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 648 குடும்பங்களும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 228 குடும்பங்களும் மீளக்குடியமர்வதற்காகக் காத்திருக்கின்றனர்.
சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 660 குடும்பங்களும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 189 குடும்பங்களும், தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் 9 ஆயிரத்து 884 குடும்பங்களும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 464 குடும்பங்களும் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 616 குடும்பங்களும் காத்திருக்கின்றனர்.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 110 குடும்பங்களும், மருதங்கேணியில் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 606 குடும்பங்களும் என 15 ஆயிரத்து 495 குடும்பங்களும் மீளக் குடியமர்வுக்கு காத்திருக்கின்றனர்.